search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் தேர்வு"

    ‘நீட்’ தேர்வு பாதிப்பால் இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர். #NEET #MBBS
    சென்னை:

    அரசு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் தகுதியாக கருதப்படுமே தவிர அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற இயலாது.

    தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2447 எம்.பி.பி.எஸ். இடங்களில் சி.பி.எஸ்.சி. மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து நீட் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகள்தான் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளனர்.

    அரசு பள்ளிகளில் படித்த ஏழை-எளிய மாணவர்களால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

    இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர். இது ஒரு சதவீதம் கூட இல்லை என்பது வேதனையான வி‌ஷயமாகும்.

    2016-ம் ஆண்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தபோது 3.0 அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவு எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்றனர்.

    2016-ம் ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் மிகவும் குறைந்த அளவிலேயே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் படிக்க முடியாமல் ஏழை மாணவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட நீட் பயிற்சியும் சிறப்பாக அமையவில்லை என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

    தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை அரசு பள்ளி மாணவர்களால் செலுத்த முடியவில்லை.

    மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியினை சில வருடங்களுக்கு முன்பே தொடங்கி இருந்தால் தனியார் பள்ளி மாணவர்களை போல அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று சமுதாய சமத்துவ மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திர நாத் தெரிவித்துள்ளார்.

    அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் குழப்பம் அடைய காரணம் தமிழ் கேள்வித்தாளில் உள்ள தவறுகள்தான் என்று ஆசிரியை ஒருவர் தெரிவித்தார். தமிழில் தேர்வு எழுத மாணவர்களை ஆர்வப்படுத்திய நிலையில் 49 வினாக்கள் தவறாக அமைந்து விட்டதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் நீட் தேர்வு மதிப்பெண் ஒதுக்கீட்டிலும் மாறுபாடு ஏற்பட்டதால் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகளவு சேர முடியாத நிலை ஏற்பட்டது.



    இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே நீட் தேர்வு பயிற்சி அளிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 320 பள்ளி ஆசிரியர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் 32 மாவட்டங்களில் இருந்தும் 320 ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. 400 நீட் பயிற்சி மையங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

    அந்த மையங்களில் தற்போது பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவார்கள். இதுதவிர இந்த பயிற்சியாளர்களுக்கு பாடம் வாரியாக தனி பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

    இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. #NEET #MBBS

    ×